Tamilnadu Election 2011 date Announcement

Tamilnadu Secretariat
டெல்லி: தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே 16ம் தேதி முடிவடைகிறது. அடுத்த சில நாட்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஜூன் மாதத்தி்ல மேற்கு வங்க சட்டசபை காலம் முடிவடைகிறது.

இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது தேர்தல் தேதியை இறுதி செய்வதற்கான கட்டத்திற்கு தேர்தல் ஆணையம் வந்து விட்டது. இதுதொடர்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டது. அடுத்து அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.